ராகுல் காந்தி நேற்று அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருடன் வயநாடு தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்திய காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

வயநாடு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்து உதவுங்கள்: ராகுல் காந்தி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வயநாடு,

தொடர் மழையாலும், வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தாராளமாக அளித்து மக்கள் உதவ வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்தும், பல்வேறு மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையால் கேரளவில் இதுவரை 72 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் வயநாடு மக்களவைத் தொகுதிக்குள் வரும் கவலப்பாரா, புதுமலா ஆகிய இரு மலைக்கிராமங்களில் கடந்த 8-ம் தேதி பெய்த மழையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இரு கிராமங்களும் புதையுண்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இங்கு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர். ராணுவத்தினர், தீயணைப்பு படையினர் போலீஸார், மக்கள் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாளை முதல் மீண்டும் கேரளாவில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வயநாடு தொகுதியில் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டம், மலப்புரம் மாவட்டம் இரு மாவட்டங்களும் வயநாடு தொகுதிக்குள் வரும்.

வயநாடு தொகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதங்களைப் பார்வையிடவும், மக்களைச் சந்திக்கவும் அத்தொகுதி எம்.பி. ராகுல் காந்தி நேற்று கேரளாவுக்குச் சென்றார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நிவாராண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

அப்போது ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசுகையில், "கேரளாவில் மழையால் ஏற்பட்ட சேதம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன். அவர் தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். முதல்வர் பினராயி விஜயன், வயநாடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளேன் விரைவில் உரிய உதவிகள் வந்து சேரும் " எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அதில் அவர் கூறுகையில், "என்னுடைய வயநாடு மக்களவைத் தொகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு இப்போது அவசரமாக வேஷ்டிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், பாய், படுக்கை விரிப்பு, போர்வை, உள்ளாடைகள், நைட்டீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், செருப்புகள், சானிட்டரி நேப்கின், சோப், டூத் பிரஷ், டூத் பேஸ்ட், டெட்டால், சோப்பு பவுடர், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகிறது.

மேலும், மக்கள் சாப்பிடத் தகுந்த பிஸ்கட், சர்க்கரை, பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், காய்கறிகள், தேங்காய், மசாலா பவுடர்கள், ரொட்டிகள், குழந்தைகளுக்கான உணவுகள் ஆகியவற்றை வழங்கி உதவலாம். அனைவரும் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சேகரிப்பு மையம் மூலம் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். அனைவரும் உதவுங்கள்" என ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.


பிடிஐ

SCROLL FOR NEXT