திருவனந்தபுரம்
கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிககை 68 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 2 லட்சம் பேர் வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், வயநாடு, கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணிநேர நிலவரப்படி (நேற்று காலை 8 மணிவரை)கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாநிலம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக கேரளாவில் ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை
மழை, வெள்ளச் சேதம் தொடர்பாக மாநில உயரதிகாரிகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.
ராகுல் வருகை
வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், அத்தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார்.