பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து ரூ1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இ அறிவித்தது. ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளை தொடங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்துக்குரிய வித்தியாசத்தை மாணவர்களிடம் இருந்து இனிமேல் பள்ளிகள் வசூலிக்கும்.

சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200கட்டணம் செலுத்த வேண்டும், இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் 5 பாடங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

12-ம் வகுப்பு எஸ்சிஎஸ்டி மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்கு கட்டணம் ஏதும் இதற்கு முன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ.300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் பார்வைசவால் உடையவர்கள் 100 சதவீதம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டணத்தின்படி தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் மீதமுள்ள வித்தியாசத் தொகையை கடைசித் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படாது, 2019-20-ம் ஆண்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், மைக்ரேஷன் கட்டணமும் ரூ.150லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களைக் கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகள் இதற்கு முன் 5 பாடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது இது இனி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கு கூடுதல் பாடத்துக்கு ரூ.ஆயிரம் வசூலித்த நிலையில் இனி ரூ. 2ஆயிரம் வசூலிக்கப்படும்.

பிடிஐ

SCROLL FOR NEXT