புதுடெல்லி,
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதத்துக்கு புதிய டிரக்குகளை(லாரி) வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக என்று அனைத்து இந்திய போக்குவரத்து நல அமைப்பு(ஏஐடிடபிள்யுஏ), அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு(ஏஐஎம்டிசி) தெரிவித்துள்ளது
அதிகமான ஜிஎஸ்டி வரி, டீசலுக்கு 2 ரூபாய் செஸ், காப்பீட்டு கட்டணம் அதிகரிப்பு, வருமானவரி, வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்ட முடியாமல் போராட்டம் போன்றவற்றால் லாரி வைத்து ஓட்டும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து தொழில்நடத்த முடியாத சூழலில் இருப்பதால், கடந்த 6 மாதங்களாக புதிய லாரிகள், டிரக்குகளை வாங்காமல் புறக்கணிக்க இருக்கிறார்கள்.
இதுகுறித்து அனைத்து இந்திய போக்குவரத்து நல அமைப்பு(ஏஐடிடபிள்யுஏ) தேசியத் தலைவர் மகேந்திரன் ஆர்யா நிருபர்களிடம் கூறியதாவது:
லாரி, டிரக் வைத்து சரக்கு போக்குவரத்து தொழில் நடத்துவதற்கு இப்போது ஏதுவான சூழல் இல்லை. எங்கள் அமைப்பில் உள்ள அனைவரும் இந்த மாதத்தில் இருந்து அடுத்துவரும் 6 மாதங்களுக்கு புதிய டிரக்குகள் ஏதும் வாங்காமல் நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இனிமேல் வாகனங்கள் வைத்து ஓட்டி தொழில்செய்வது லாபகரமான தொழில் இல்லை.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் எங்கள் அமைப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவிதமான புதிய டிரக்குகளையும் வாங்க மாட்டோம்.
டிரக் வாங்கினால் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, தொடக்கத்திலேயே அதிகமான செலவு ஏற்படுவதால், சிறிய அளவிலான போக்குவரத்து தொழில் செய்பவர்கள் நேரடியாக சுமையை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு கடன்கூட கிடைப்பதில்லை, சலுகையும் கிடைப்பதில்லை.
'சின் குட்ஸ்' எனப்படும் பான் மசாலா, சிகரெட், புகையிலை ஆடம்பரமான கார்கள், குளிப்ரானங்கள் ஆகியவற்றோடு சேர்த்து லாரி, டிரக்குகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறார்கள். இந்த வரையரைக்குள் டிரக்குகளை கொண்டுவர முடியுமா. ஜிஎஸ்டி செலுத்தும் டிரக் உரிமையாளர்களுக்கு கடன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சமரசம் செய்து கொள்கிறார்களா
பட்ஜெட்டில் இரு மோசமான முடிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். டீசலுக்கு 2 ரூபாய் செஸ், ஆண்டுக்கு ரூ. ஒரு கோடிக்கு மேல் பரிமாற்றம் நடந்தால், 2 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஒட்டுமொத்த லாரிபோக்குவரத்தில் 60 சதவீதம் டீசலுக்கே செலவு செய்துவிடுகிறோம். எவ்வளவு அதிகரித்தால் ஒட்டுமொத்த போக்குவரத்து செலவு பாதிக்கும் என்று சரியாகக் கணக்கிட்டு கூறுவதற்கும் இதுஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல " எனத் தெரிவித்தார்.
அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு(ஏஐஎம்டிசி) முன்னாள் தலைவரும், பிரதான குழுவின் தலைவருமான பால் மல்கித் சிங் கூறுகையில், " யாருமே புதிய வாகனங்கள் வாங்கவில்லை. கடந்த 6 மாதங்களாகவே பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் புதிய லாரிகள், டிரக்குகளை வாங்காமல்தான் இருக்கிறார்கள்
போக்குவரத்து துறையில் பலமாதங்களாக பெரும் மந்தமான சூழல் நிலவுவதால், போக்குவரத்து தொழிலில் இருப்போர் புதிய வாகனங்கள் ஏதும் வாங்கவில்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் சூழல் தொழில்செய்ய ஏதாவாக இல்லை.
பெரும்பாலான உறுப்பினர்கள் லாரி வாங்கிவிட்டு மாதத்தவணையை செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழல் மாறும்வரை, அனைத்து வங்கிகளும் வாகனக் கடனை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் வாகன உரிமையாளர்கள் வாகனங்கள் ஒப்படைப்பு செய்தும், கடன் செலுத்த முடியாத சூழலுக்கும் தள்ளப்படுவார்கள்.
ஆண்டுக்கு ஒரு கோடிரூபாய்க்கு மேல் பணம் பரிமாற்றம் செய்தால், 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்வது கூடுதல் சுமையை வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த துறை அதிகமாக ரொக்கப்பணத்தை சார்ந்தது. ஓட்டுநர், உதவியாளர், கிளீனர் ஆகியோர் தங்களின் தேவைக்கு ரொக்கப்பணத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் " எனத் தெரிவித்தார்.
பிடிஐ