ஸ்ரீநகர்
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் அங்குள்ள நிலவரத்தைப் பார்வையிட்டு வரும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதிக்குச் சென்றார். அங்கு ஈத் பண்டிகை வருவதை முன்னிட்டு கால்நடை வணிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்து
அவர் உற்சாகமாகப் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-வது சட்டப்பிரிவினை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு அடுத்த நாள் (ஆகஸ்ட் 6) முதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் முகாமிட்டு வருகிறார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீநகர் நகரம் முழுவதும் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் அவர் உரையாடினார்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக இருந்த அனந்த்நாக்கில் அமைக்கப்பட்ட ஒரு கால்நடைச் சந்தையை அவர் பார்வையிட்டார். அவர் பார்வையிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோ காட்சியில், கால்நடைகளின் விலை, எடை மற்றும் உணவு பற்றியும், பெரும்பாலும் சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடுகள் குறித்தும் தோவல் விசாரிப்பதைக் காணலாம்.
ஒரு இளம் வர்த்தகராக உள்ள சிறுவனிடம் தோவல் பேசுகிறார். அப்போது தனது கால்நடைகளை கார்கிலின் டிராஸ் பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக தோவலிடம் தெரிவித்தபின், அச்சிறுவன் கேட்கிறார்: "டிராஸ் எங்கே என்று உங்களுக்குத் தெரியுமா?".
அதற்கு தோவல் பதிலளிப்பதற்கு முன்பு, அனந்த்நாக் துணை ஆணையர் காலித் ஜனகீர் அந்தச் சிறுவனிடம், ''உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவர் யார் தெரியுமா. நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்'' என்று கூறுகிறார்.
அதற்கு சிரித்த தோவல் அந்தச் சிறுவனைத் தட்டி, கையை அசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசர் மற்றும் அவரது உதவியாளர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன், ஈத் கொண்டாட்ட மனநிலையில் உள்ள வட்டாரங்களைப் பார்வையிட்டனர். உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்காகப் பல்வேறு இடங்களுக்கு தோவல் சென்றார்.
பின்னர் அவர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎஃப்) பணியாளர்களுடன் பேசினார். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்கள் செய்த அற்புதமான பணிகளுக்கு அஜித் தோவல் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, புதன்கிழமை அன்று மூடப்பட்ட கடைகளைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நடைபாதையில் உள்ளூர் மக்களுடன் அஜித் தோவல் உணவு சாப்பிடுவதைக் காண முடிந்தது. நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு வட்டார மக்களை தோவல் சந்தித்து வருகிறார்.