புதுடெல்லி
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை ராகுல் காந்தி பரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அடுத்த தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடி தலைவரை தேர்வு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மற்ற அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. முன்னதாக காரிய கமிட்டிக் கூட்டத்தில் ராஜினாமா முடிவை ராகுல் காந்தி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை ஆளும் பாஜக வேகப்படுத்தி வருவதால் வலிமையான தலைமை தேவை என்பதால் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ‘‘காரிய கமிட்டிக் கூட்ட ஆலோசனை முடிந்த பிறகு நிர்வாகிகள் 5 குழுவாக பிரிந்து தனித்தனியாக விவாதித்து வருகின்றனர். பின்னர் இரவு மீண்டும் காரிய கமிட்டிக் கூடுகிறது. ராகுல் காந்தி தொடர வேண்டும் என பல நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் தலைவர் தேர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.