இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்:  புதிய தலைவர் தேர்வு ஆலோசனையில் சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை செய்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலைவர் தேர்வு செய்யும் 5 குழுக்களின் ஆலோசனையில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

இந்த கூட்டத்தில் அடுத்த தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடி தலைவரை தேர்வு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மற்ற அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. காரிய கமிட்டிக் கூட்ட ஆலோசனை முடிந்த பிறகு நிர்வாகிகள் 5 குழுவாக பிரிந்து தனித்தனியாக விவாதித்து வருகின்றனர்.

மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அந்த குழுவினர் விவாதித்து புதிய தலைவர் பற்றி கருத்து கேட்கின்றனர். இந்த பட்டியல் பின்னர் காரியக் கமிட்டி உறுப்பினர்களின் மொத்தமாக அமர்ந்து ஆலோசனை செய்து அதில் இருந்து ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த மொத்த நடைமுறையும் முடிந்து புதிய தலைவர் தேர்வு செய்ய 4 நாட்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காரிய கமிட்டிக் கூட்டம் தொடங்கி பொதுவான ஆலோசனை முடிந்த பிறகு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 5 குழுக்களின் ஆலோசனையில் அவர்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து சோனியா காந்தி கூறுகையில் ‘‘இந்த ஆலோசனையில் நாங்கள் பங்கேற்காமல் இருப்பது தான் சரியானதாக இருக்கும். புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் நானும், ராகுல் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதை ஏற்கெனவே முடிவு செய்து சொல்லி இருக்கிறோம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT