புதுடெல்லி
டெல்லியில் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது புதிய சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் ஆண்கள் உடனுக்குடன் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடைமுறை சட்ட விரோதம் என 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதைத் தடைசெய்ய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் முத்தலாக் சட்டத்தின் கீழ் பல பகுதிகளிலும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. டெல்லியில் முதன்முறையாக முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ரைமா யாஹியா (வயது 29) அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதிர் ஷமீமைத் திருமணம் செய்துகொண்டேன். கடந்த ஜூன் மாதம் அவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துள்ளார். இது சட்டவிரோதம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஷமீம் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.