இந்தியா

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது: ஜம்முவில் பள்ளிகள் திறப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஜம்முவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.

(படம்: ஸ்ரீநகரில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழக்கம்போல் தொழுகைகள் நடந்தன)

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 144 தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அமைதியாக மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தினர். மளிகை, மருந்து, காய்கறிக் கடைகள் திறந்திருந்தன. எனினும் செல்போன், இணைய சேவை சீராகவில்லை. தூர்தர்ஷன் உட்பட 3 சேனல்கள் மட்டும் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

ஜம்முவில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பெருமளவு பள்ளிகளுக்கு வருகை தந்தனர். போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டுள்ளதால் பள்ளி வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும் பக்ரீத் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நேற்று மாலை வழக்கம் போல் மக்கள் பணிகளை மேற்கொண்டனர். (வீடியோ: ஏஎன்ஐ)

SCROLL FOR NEXT