இந்தியா

இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி: புதிய தலைவர் குறித்து தீவிர ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். ராகுல் காந்தியின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன. புதிய தலைவர் தேர்வில் அவர் உறுதியாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாத சூழலில் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே குழப்பமான சூழல் நிலவுகிறது.

ராகுல் காந்தியைப் போன்று இளம் தலைவர் ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். பிரியங்கா காந்தியைத் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தலைவர் பதவிக்கு தன்னைப் பரிசீலிக்க வேண்டாம் என பிரியங்கா கூறியுள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது குறித்தும், அடுத்த தலைவர் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அடுத்த தலைவர் யார் என்பதை உடனடியாக அறிவிக்க வாய்ப்பு சற்று குறைவு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. அவர்கள் முன் வைக்கும் கருத்துக்கு ஏற்ப தலைவர் தேர்வு அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரியக் கமிட்டி கூட்டத்தில் தலைவர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் முடிந்தாலும் உடனடியாக அறிவிப்பு வெளியாகாது, சற்று தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT