இந்தியா

‘‘பாகிஸ்தான் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது’’ - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பதில் 

செய்திப்பிரிவு

புதுடெல்லி
பாகிஸ்தான் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த ரயில் வாகா எல்லையில் நிறுத்தப்பட்டதால் 3 மணிநேரம் பயணிகள் தவித்தனர்.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், இந்திய விமானங்களுக்கு தடை என அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பாகிஸ்தான் ஒரு தலைபட்சமாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் இதை செய்துள்ளது. இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கை இருதரப்பு உறவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.

பாகிஸ்தான் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT