புதுடெல்லி,
இந்த ஆண்டு இறுதிக்குள் 'பிரதான் மந்தரி கிசான் சம்மான் நிதி' (பிஎம்.கிசான்) திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவார்கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை 3 தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
உ.பி. மாநிலம் கோரக்பூரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக ஏராளமான விவசாயிகள் முதல் தவணையைப் பெற்றனர். தொடக்கத்தில் இத்திட்டத்தில் 12.5 கோடி விவசாயிகளைத்தான் இணைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன்பின் கூடுதலாக 2 கோடி விவசாயிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக அரசு 2019-20 ஆம் ஆண்டில் ரூ.87 ஆயிரத்து 217.50 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை 3 கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை 5.88 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். 3.40 கோடி விவசாயிகள் 2-ம் கட்ட தவணையை வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதில் விவசாயிகள் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தத் திட்டத்தில் தொடக்கத்தில் 12.5 கோடி விவசாயிகள் இடம் பெறத் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக 2 கோடி விவசாயிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது''.
இவ்வாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பிடிஐ