‘1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு’ வழக்கு குற்றவாளியான யாகூப் மேமன், வரும் 30-ம் தேதி நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இம்மனு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப் படுகிறது.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை கோரி யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இன்னும் சட்ட ரீதியான பரிகாரங்கள் நிறை வடையவில்லை. தண்டனையை நிறைவேற்றுவதில் மட்டுமீறிய அவசரம் காட்டப்படுகிறது. நான் நாக்பூர் சிறையிலிருக்கும்போது மும்பையிலிருந்துதான் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான குறிப்பாணை ( டெத் வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் சட்டரீதியான நடைமுறை களைப் பின்பற்ற எனக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. மேலும் மகாராஷ்டிர ஆளுநருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இம்மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது. இம்மனு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கூறும்போது, “இம்மனுவை விசாரிக்க ஏற்கெனவே அமர்வை நியமித் தாயிற்று. வழக்கின் கோப்பு என்னிடம் வந்தது. வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது உணர்ச்சி கரமான விவகாரம். நீதிபதி ஏ.ஆர். தவே தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு இதனை விசாரிக்கும்” என்றார்.