புதுடெல்லி
அயோத்தி நிலவுரிமை தொடர்பான வழக்கை வாரத்துக்கு 5 நாட்கள் வீதம் வேகமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ள நிலையில் இதற்கு முஸ்லிம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிர்மோகி அகாரா சார்பில் முதல் 2 நாட்கள் வாதங்கள் வைக்கப்பட்டன. நேற்று முதல் ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய விசாணையின்போது, இந்த வழக்கை நீதிமன்றம் நடைபெறும் வாரத்தின் 5 நாட்களும் விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நான்காவது நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அயோத்தி வழக்கை வாரத்துக்கு 5 நாட்கள் வீதம் வேகமாக விசாரிக்க முஸ்லிம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் உச்ச நீதிமன்றத்தில் கூறுகையில் ‘‘நீதிமன்றம் செயல்படும் வாரத்தில் 5 நாட்களும் அயோத்தி வழக்கை விசாரிக்க கூடாது. இது அவசர கதியில் வழக்கை விசாரிக்க ஏதுவாகி விடும்.
இதன் மூலம் எங்கள் தரப்பு வாதங்களை துல்லியாக எடுத்துரைக்கவும், வேகமாக எடுத்துரைக்க வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகி விடுவோம். எனவே அனைத்து நாட்களும் விசாரிக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் கைவிட வேண்டும்’’ எனக் கூறினார்.