புதுடெல்லி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையி லான அமர்வு முன்பு நேற்று மூன்றா வது நாளாக விசாரணைக்கு வந்தது.அப்போது, ராம் லல்லா விராஜ் மான் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் ஆஜராகி வாதிட் டார். அப்போது அவரிடம் நீதிபதி கள், “இந்து கடவுள்களை பொறுத்த வரை சட்டத்தில் அவர் சட்டப்பூர்வ நபராக கருதப்படுகின்றனர். இந்தக் கடவுள்கள், சொத்துகள் மற்றும் நிறுவனங்களை வைத்திருக்கலாம். வழக்கு தொடரலாம்.
என்றாலும், நிலப் பிரச்சினையில் ஜன்மஸ்தானம் (பிறந்த இடம்) எவ்வாறு ஒரு வாதியாக வழக்கை தொடர முடியும்? கடவுள்களின் சிலைகளை பொறுத்தவரை அவை சட்டப்பூர்வ நபராக கருதப்பட்டு வருகின்றன. பிறந்த இடத்தை அவ்வாறு கருத முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு கே.பராசரன், “இந்து மதத்தில் வழிபாட்டுக்குரிய புனித இடத்தை பொறுத்தவரை அங்கு சிலைகள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆறுகளையும் சூரியனையும் இந்து மதத்தில் வழிபடுகின்றனர். எனவே பிறந்த இடத்தை சட்டப்பூர்வ நபராக நாம் கருத முடியும்” என்றார்.
வழக்கில் ஆறுகள், வாதியாக முடியும் என்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் கூறியிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
வாதத்தின் இறுதியில் நீதிபதி கள் கூறும்போது, “1949-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கடைசி தொழுகை நடைபெற்றது. அங்கு சிலை வைத்ததால் முஸ்லிம்கள் தொழுகை நடத்த முடியவில் லையா?” என்றனர்.
இதற்கு இந்து அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன், “அங்கு சிலை வைத்த பிறகு அந்தக் கட்டிடம் அதன் தன்மை மாறிவிட்டதால் அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை” என்றார்.
சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் கூறும்போது, “ராம் லல்லா விராஜ்மான் மற்றும் நிர் மோகி அகாடா தொடர்ந்த வழக்கு களில் இருவரும் மோதிக்கொள்கின் றனர். இதில் ஒருவர் அனுமதிக்கப் பட்டால் மற்றொருவர் வெளியேற வேண்டியிருக்கும்” என்றார்.