புதுடெல்லி,
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்புகையில் அந்நாட்டின் எஃப் 16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் உயரிய வீர் சக்ரா விருது வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படையின் 5 மிராஜ்-2000 ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பக்துன்கவா பகுதியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது குண்டு வீசி அழித்துவிட்டுத் திரும்பின.
அப்போது இந்திய விமானங்களை பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் துரத்தி வந்தது. அந்த விமானத்தை இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தன் தனது மிக் பைசன் ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தினார். அப்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாராசூட் மூலம் அபிநந்தன் இறங்கினார்.
அவரைக் கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இரு நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக இந்திய ராணுவத்திடம் வாஹா எல்லை வழியாக ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ராணுவத்தில் மிகச் சிறப்பாக சேவை செய்தவர்களுக்காக தரப்படும் 3-வது மிகப்பெரிய விருதான வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராணுவத்தில் வீரதீரச் செயல்கள் செய்தவர்களுக்கான விருதுக்கான இறுதிப்பட்டியல், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் முறைப்படி பெயர்கள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்