புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவு வழங்கிய இருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு நீக்கியபின் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூணாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச்சட்டம் 370-வது பிரிவை திரும்பப் பெற்று சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு, இந்தியத் தூதர் அஜய் பசாரியாவை அந்நாட்டை விட்டு வெளியேற்றியது. புதிய மசோதா அமல்படுத்தப்பட்டதன் காரணமாக காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
114 தடை உத்தரவு,இன்டர்நெட் முடக்கம், செல்போன் இணைப்பு துண்டிப்பு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை போன்ற பல உத்தரவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்வலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூணாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில்,
" ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகைளை ரத்துச் செய்யும் விதமாக அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த நிகழ்வுக்காக அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள், இன்டர்நெட் முடக்கம், செல்போன் இணைப்பு துண்டிப்பு, செய்திச் சேனல்கள் முடக்கம் போன்றவை நடைமுறையில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மக்கள் அடிப்படை வசதிகளான மருத்துவ வசதி, வங்கிச் சேவை, பள்ளிக்கூடம் செல்லுதல், அரசு அலுவலங்களுக்கு செல்லுதல், காய்கறிகள், உணவுப்பொருட்கள் என எதுவுமே கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பெண்கள் ஆகியோர் சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு எங்கும் வெளியேற முடியாமல் இருக்கிறார்கள்.
மேலும், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நீதி ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
அரசமைப்புச் சட்டம் 19,21 -ன் கீழ் மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகள் இங்கு மீறப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுஹைல் மாலிக் ஆஜராகி, அவசரவழக்காக மனுவை விசாரிக்கக் கோரினார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு உரிய நேரத்தில், விசாரணைக்கு எடுக்கப்படும். அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
பிடிஐ