இந்தியா

தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாக மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

செய்திப்பிரிவு

இரா.வினோத்

புதுடெல்லி

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு விரிவாக ஆய்வு செய்ய அனுமதி வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடகா - தமிழகம் இடையே சுமூகமான முடிவு எடுக்கப் பட்டால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 5252.40 ஹெக்டேர் பரப்பளவில் இரு அணைகளை கட்ட முடிவெடுத்துள்ளது. இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ரூ. 25 கோடி செலவில் முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையையும் தயாரித்தது. இதை மத்திய நீர்வளத்துறையில் தாக்கல் செய்து கர்நாடகா அனுமதி கோரி யுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் 20-ம் தேதி கர்நாடக அரசின் காவிரி நீர் நிர்வாக கழகம் சார்பில் மத்திய நீர்வளம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இயக்குநருக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், “கர்நாடக அரசு ராம்நகர், சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு, முகூரு ஆகிய இடங்களில் இரு அணைகளை கட்ட 5252.40 ஹெக்டேர் பரப்பளவு நிலம் தேவைப் படுகிறது. பெங்களூரு, மைசூரு மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும், 400 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக கையகப்படுத் தப்பட இருக்கும் 5252.40 ஹெக்டேர் நிலத்தில் 4996 ஹெக்டேரில் நீர்த்தேக் கம் அமைய உள்ளது. 256.40 ஹெக்டேர் நிலம் பிற கட்டுமானங்களுக்கு தேவைப்படுகிறது. அணை கட்டு வதற்கான 3181.9 ஹெக்டேர் காவிரி வனவிலங்கு சரணாலயத்திலும், 1869.5 ஹெக்டேர் ரிசர்வ் வனப்பகுதியிலும், 201 ஹெக்டேர் நிலம் வருவாய் துறை பகுதியிலும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகம் அனுமதி அளித்தால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடியும் வேண்டும்'' கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு மனு அளித்தார். மேலும் மத்திய நீர் வளம், வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை சந்தித்து, இந்த திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. எனவே உடனடியாக அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 19-ம் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் எஸ்.கே.ஜெயின் தலைமையில் வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், நீர் மின்சாரம் ஆகிய துறைகளை சேர்ந்த 11 பேர் நிபுணர்கள் குழு கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத் துக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதில், கர்நாடகா தாக்கல் செய்த முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கை யில் மேகேதாட்டு திட்டத்தை திட்டப் படி செயல்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்து கர்நாடகா கூடுதலான தகவல்களை யும், விளக்கங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அணைகள் கட்டப்பட இருக்கும் இடம், அதற்கான மாற்று இடம், அணை களின் உயரம் குறித்து விரிவாக விவா திக்க வேண்டியுள்ளது. அதேபோல இந்த திட்டத்துக்காக கர்நாடகா கோரி யுள்ள வனநிலம் மற்றும் வனவிலங்கு சரணாலய நிலம் மிகவும் அதிகமாக உள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டம்-2013-ன்படி நிலத்தின் அளவை குறைக்க வேண்டியுள்ளது. எனவே 4996 ஹெக்டேர் எனும் அளவை குறைத்து, மாற்று திட்டத்தை பரிந் துரைக்க வேண்டும். நிலம் கையகப் படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, நியாயமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட விவகாரகங்களில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமி ழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்குவதில் சிக்கல் நீடிக் கிறது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா - தமிழகம் இடையே சுமூக மான தீர்வு ஏற்பட வேண்டும். அப் போதுதான் மேகேதாட்டு திட்டம் குறித்து விரிவாக ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்படும் என அந்த குழு பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு எடியூரப்பா கடிதம்

பிரதமர் மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர் நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கர் நாடக எல்லைக்குள் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமோ, மத் திய அரசோ இதற்கு முன்பு பிறப் பிக்கவில்லை. எனவே மேகேதாட்டு திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்” என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகா கோரிக்கை நிராகரிப்பு

முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்த நிலையில், தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகேதாட்டு அணை திட்டம், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்புக்கு எதிரானது. எனவே எக்காரணம் கொண்டும் புதிய அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

மேலும் தமிழக முதல்வர், கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டார். இம்மனு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த மே மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனுமதி கோரியது. இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT