ஜம்மு
காஷ்மீரில் அமைதியைக் குலைக்கும் வகையில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில அரசு கருதுவதால் அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், காஷ்மீரில் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. முன்னதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. மாநிலத்தின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுத் தலைவர்கள் சஜ்ஜாத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோர் திங்கள்கிழமை இரவு கைது
செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்கள் தங்கள் குப்கர் குடியிருப்புகளிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஹரி நிவாஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியைக் குலைக்கும் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், பாதுகாப்புத் துறைகளுக்கு கைது உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது பிரிவின் விதிகளை ரத்து செய்வதாகவும் மாநிலத்தின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றைப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே காஷ்மீர் அரசின் கைது நடவடிக்கைகள் தொடங்கின. காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா இருவரும் ஞாயிற்றுக்கிழமையே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு இதுவரை 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்படவில்லை.