இந்தியா

பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய கன்னியாஸ்திரி சபையிலிருந்து வெளியேற உத்தரவு

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூஸி கலப்புராவை பிரான்ஸிஸ்கன் கிளாரிஸ்ட் சபையிலிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார். பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த ஐந்து கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பிஷப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் பிராங்கோ கைதுக்கு பலமாக குரல் கொடுத்த கன்னியாஸ்திரி லூஸி கலாப்புராவுக்கு கடந்த 5-ம் தேதியன்று ஒரு கடிதம் வந்துள்ளது.

அதில், "இந்தக் கடிதம் மூலம் நீங்கள் பிரான்ஸிஸ்கன் க்ளாரிஸ்ட் சபையிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறீர்கள் எனப்து தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பலமுறை உங்களுடைய செயற்பாட்டைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறோம்.

ஆனால், நீங்கள் ஒருமுறைகூட அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் சரியான விளக்கம்கூட அளிக்கவில்லை.

உங்கள் வாழ்க்கைமுறையானது பிரான்ஸிஸ்கன் க்ளாரிஸ்ட் சபையின் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. சபையைவிட்டு நீங்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி லூஸி, எர்ணாகுளத்தில் நடந்த போராட்டங்களில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் கன்னியாஸ்திரி லூஸிக்கு முதல் முறையாக எச்சரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் தொடர்ச்சியாக இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் தற்போது அவரை சபையைவிட்டு வெளியேறுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT