மும்பை
முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு எனது தாயை இழந்தது போன்றது என, பேஸ்புக் தோழியை தேடி சென்று பாகிஸ்தானில் 6 ஆண்டுகள் சிறைபட்டு இந்தியா திரும்பிய இளைஞர் அன்சாரி உருக்கமுடன் கூறியுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் ஹமீது நேஹல் அன்சாரி. பொறியாளரான இவர் பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்து பிறகு நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில் திடீரென அந்த பெண் அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் இதனால் சோகமான அன்சாரி தனது தோழியை சந்திக்க ஆப்கானிஸ்தான் வழியாக 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். கரக் நகரில் அவரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். அவர் 3 வருடம் சிறையில் இருந்துள்ளார்.
ஆவணங்கள் இல்லாமல் உளவு பார்க்க நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2015-ம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியது.
அவரது தண்டனை காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தநிலையில் அவரை விடுவித்து இந்தியா அழைத்து வர அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெரும் முயற்சி மேற்கொண்டார். பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று அன்சாரி இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்தநிலையில் சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த செய்தி கேட்டு அன்சாரி பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சுஷ்மா ஸ்வராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் நாடு திரும்ப அவர் செய்த முயற்சிகள் மிகப்பெரியது.
அவர் எனக்கு தாய் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பியபோது எனக்கு நல்லமுறையில் வழிகாட்டினார். என் வாழ்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அவரது மரணம் எனக்கு பேரிழப்பு. எனது தாயை இழந்தது போன்றது’’ எனக் கூறியுள்ளார்.