இந்தியா

அக்கா.. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே சென்றுவிட்டீர்களே!- சுஷ்மா மறைவுக்கு ஸ்மிருதி இரானியின் உருக்கமான ட்வீட்

செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கமான ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா ஸ்வராஜ் உயிர் பிரிந்தது. வீட்டில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. உடனடியாக அவசர சிகிச்சையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மாரடைப்பால் அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி என தலைவர்களும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

அதில், "நீங்கள் ஒருமுறை உங்கள் மகள் பன்சூரியிடம் சொல்லி நான், நீங்கள், பன்சூரி மூவரும் ஒரு பிரம்மாண்ட மதிய உணவுக்கு ஹோட்டலுக்கு செல்லலாம் அதற்காக சிறப்பான உணவகத்தைத் தேர்வு செய்யுமாறு கூறியிருந்தீர்கள். ஆனால், அக்கா அதை நீங்கள் நிறைவேற்றாமலேயே சென்றுவிட்டீர்களே" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT