காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தியை தனிமைச் சிறையில் வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் அவரது மகள் இல்திஜா ஜாவேத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு.
முன்னதாக, கடந்த ஞாயிறு இரவு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். பின்னர் திங்கள் கிழமையன்று மெஹபூபாவை கைது செய்த போலீஸார் அவரை அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், மெஹபூபா முஃப்தியை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவருடன் வழக்கறிஞர்களோ அல்லது தானோ தொடர்பு கொள்ள விடாமல் தடுப்பதாகவும் அவரது மகள் இல்திஜா ஜாவேத் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஆடியோ குறுந்தகவல்களை அனுப்பிய இல்திஜா ஜாவேத், "எனது தாயாரை கைது செய்து அரசு விருந்தினர் மாளிகையான ஹரி நிவாஸுக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவருடன் நாங்கள் யாரும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அங்குள்ள அனைத்து லேண்ட்லைன் எண்கள், செல்போன் எண்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
என் தாயார் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். வழக்கறிஞர்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ அவர் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்களைத் தூண்டிவிடக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளோம் என்று கூறுவதே ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற செயலாக இருக்கிறது.
இதை நான் எனது தாயாரை சிறைபிடித்திருப்பதற்காக சொல்லவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ரவுடிகளை, கிரிமினல் குற்றவாளிகளை நடத்துவதுபோல் நடத்துகின்றனர் என்பதால் சொல்கிறேன். தங்களால் எந்த எல்லைக்கு வேண்டுமானால் செல்ல இயலும் என்று காஷ்மீரிக்களை எச்சரிக்கவே இப்படி செய்கின்றனர்.
தாங்கள் செய்திருக்கும் செயல் சட்டவிரோதமானது என்பதை இந்திய அரசாங்கமே நன்றாக அறியும். அதேபோல், அவர்களின் இந்த அழுத்தத்துக்கு இங்குள்ள மக்கள் அடிபணியப் போவதில்லை என்பதும் இந்திய அரசுக்கு புரியும்" என்று கூறியுள்ளார்.