சுஷ்மா ஸ்வராஜ் |கோப்புப் படம். 
இந்தியா

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுஷ்மாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகும் அவர் வெளியுறவுத் துறைஅமைச்சராக துடிப்புடன் பணி
யாற்றினார். எனினும், உடல்நலம் காரணமாக சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்திடம் கூறிவிட்டார்.

இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அதை மிகவும் வரவேற்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தியாவின் ஒருமைப்பாட்டை உறுதிப்
படுத்தியதாக பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், ட்விட்டரில் நேற்று மாலை வெளியிட்ட பதிவில், ‘‘நன்றி பிரதமர் மோடி. மிகவும் நன்றி. இதுபோன்ற ஒரு நிகழ்வை என் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என்றுதான் காத்திருந்தேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அவரை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுஷ்மாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘‘உடல்நலம் பாதிக்கப்பட்ட சுஷ்மாவை இரவு 10.15-க்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த போது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்து சிகிச்சை
தொடங்கப்பட்டது’’ என்று தெரிவித்தனர்.

சுஷ்மா உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து பாஜக மூத்ததலைவர்கள், அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனைக்கு வெளியிலும் பாஜக தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில், மாரடைப்பால் சுஷ்மா காலமானதாக டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை அறிந்து பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுஷ்மாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள், மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சுஷ்மா கணவர் ஸ்வராஜ் கவுஷல் மற்றும் மகள் பன்சுரியுடன் வசித்து வந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 1953-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பிறந்தவர். உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார். பாஜகவில் சேர்ந்து பிரபலமானவர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மத்தியபிரதேசத்தில் உள்ள விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் பிரதமர் மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத் துறை பொறுப்பு வகித்த 2-வது பெண் என்ற பெருமை சுஷ்மாவுக்கு கிடைத்தது.

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, வெளிநாடுகளில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்த இந்தியர்களுக்கு உடனடி
யாக உதவி செய்தவர். பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைப் பெற உடனடியாக விசா வழங்க உத்தரவிட்டார். வெளியுறவுத் துறையை மக்களுடன் நெருக்கமான துறையாக மாற்றியதில் சுஷ்மாவின் பங்கு மிகப் பெரியது.

எம்.பி.யாக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் 3 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். கடந்த 1977-ம் ஆண்டில் தனது 25 வயதில் ஹரியாணா மாநிலத்தின் கேபினட் அமைச்சரானார். பின்னர் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி முதல் 1998 டிசம்பர் 3-ம் தேதி வரை டெல்லி முதல்வராகவும் சுஷ்மா பதவி வகித்தார்.

இந்தியாவில் ‘மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அரசியல்வாதி’ என்று அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ‘வால் ஸ்டிரீட்’ சுஷ்மாவுக்கு புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

“இந்திய அரசியலில் புகழ் பெற்ற ஓர் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. சிறப்பான தலைவரின் மறைவுக்கு இந்தியா வருந்துகிறது’’
என சுஷ்மா மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுடன் சிறந்த நட்புறவை வளர்த்தவர் என்று பல மாநில முதல்வர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

‘‘மனிதாபிமானமுள்ள, பேச்சாற்றல் நிறைந்த, மாற்றுக் கட்சியினரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’’ என்று அரசியல் தலைவர்கள் பலரும் ஒருமனதாக சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.- பிடிஐ

SCROLL FOR NEXT