ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 2019 மக்களவையில் இன்று நிறைவேறியது, ஆகஸ்ட் 5ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது, இதைப்பற்றிய விமர்சனங்கள் நிபுணர்கள் கருத்துக்கள், அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகள் பாராட்டுக்கள் என்று சொல்லாடல் களன் விரிந்து பரந்து வரும் நிலையில் இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார்.
“அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 காஷ்மீரை இந்தியாவுடன் பிணைக்கவில்லை, மாறாக பிரித்து வைத்துள்ளது. உரிய காலம் வரும்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம். சட்டப்பிரிவு 371-ஐ ரத்து செய்யும் நோக்கம் நரேந்திர மோடி அரசுக்கு இல்லை என்பதை நாட்டின் பிறபகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார் அமித் ஷா.
சுப்ரியா சுலே என்ற உறுப்பினர் ஆலோசனைகள் இல்லாமல் மசோதா நிறைவேற்றப்படுவது பற்றி கேள்வி எழுப்புகையில், அமித் ஷா, “மூன்று தலைமுறைகளகா நடந்த ஆலோசனைகள் எந்த வித பலன்களையும் அளிக்கவில்லை. ஆகவே சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதுள்ளது. சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.
மாநில சட்டப்பேரவை முன்மொழிவை தடுத்த போது, முதல்வர் ராஜினாமா செய்த போது மக்கள் கருத்தை கேட்காமல்தானே ஆந்திர மாநிலம் 2ஆகப் பிரிக்கப்பட்டது. ஆகவே கருப்பு நாள் இன்று அல்ல, அன்று அந்த முடிவை எடுத்த தினம் கருப்பு தினம்.
அதே போல் ஒரே இரவில் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கலாமா என்று கேட்கிறீர்கள், 1977ம் ஆண்டு எமர்ஜென்சியைக் கொண்டு வந்த் ஒட்டுமொத்த இந்தியாவையுமே யூனியன் பிரதேசமாக்கிய நீங்கல் இது பற்றி கேட்க உரிமையற்றவர்கள்” என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் ஹஸ்னைன் மசூதியின் ஊரடங்கு உத்தரவு பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, “பாதுகாப்பு நிலவரங்கள் மோசமானதால் ஊரடங்கு கொண்டு வரப்படவில்லை, மாறாக பாதுகாப்பு நிலைமைகள் மோசமானதாகி விடக்கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது” என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசியதற்கு பதில் அளித்த அமித் ஷா, “எத்தனைக் காலம்தான் வாக்கு வங்கி அரசியல் பின்னால் செல்ல முடியும்” என்றார்.
அதே போல் அரசு வரலாற்றுப் பிழை செய்கிறது என்று கூறிய அசாசுதீன் ஓவைசிக்கு பதில் அளித்த அமித் ஷா, “வரலாற்றுப் பிழை செய்யவில்லை, வரலாற்றுப் பிழையைத் திருத்துகிறது.
பேசிய ஒருவர் கூட சட்டப்பிரிவு 370 எப்படி ஜம்மு காஷ்மீருக்கு நன்மை பயக்கிறது என்று பேசவில்லை. ஏனெனில் அதனால் எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதுதான்.
குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க முடியாத சட்டம் நாட்டுக்கு எப்படி நல்லதாக இருக்க முடியும்? சிறுபான்மையினர் தேசிய ஆணையம் ஏன் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முடியவில்லை? நீங்கள் எவ்வளவு உரக்க எதிர்ப்புத் தெரிவித்தாலும் இதனை நான் மீண்டும் மீண்டும் கூறத்தான் போகிறேன். சஃபாய் கரம்சாரிகள், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முடியுமா? முடியாது. ஏனெனில் எதையும் மாற்றிவிடக்கூடாது என்ற மனநிலை. 370ம் சட்டப்பிரிவு கொடுக்கும் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இவையெல்லாம் அங்கு நுழைய முடியாததற்குக் காரணம்.
பஞ்சாயத்து ராஜ் 3 குடும்பத்தினரால் தடுக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொண்டு வந்த இந்தத் திட்டம் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அகற்றப்பட்டவுடன் கொண்டு வரப்படும்.
எதிர்க்கட்சிகள் அந்த 3 குடும்பங்கள் எது என்று கேட்கின்றனர், நான் பெயர்களைக் கூறவும் வேண்டுமோ, நாடு அறிந்த விஷயம் இது. ஜம்மு காஷ்மீர் பூமியின் சொர்க்கம் இனியும் அப்படித்தான் இருக்கப் போகிறது. ஆயிரக்கணக்கானோர் மடிந்ததற்குக் காரணமான பாதையை நாம் துறப்போம். நரேந்திர மோடி அரசு எடுத்த பாதையில் நாம் செல்வோம். அது வளர்ச்சி எனும் பாதை.
இவ்வாறு பேசினார் அமித் ஷா.