புதுடெல்லி
சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளோம், பிறகு காஷ்மீர் எப்படி உள்நாட்டு விவகாரமாகும் என காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. இந்தநிலையில் மக்களவையில் இன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திரும்பப் பெறும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசினார்.
அப்போது என காங்கிரஸ் எம்.பி. ஆதிரஞ்சன் சவுத்திரி பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சினை ஐ.நா.விடம் உள்ள நிலையில் மத்திய அரசு அவசரப்படுவது ஏன். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் 1948-ம் ஆண்டு முதலே இது ஐ.நா.வால் கண்காணிக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி உள்நாட்டு விவகாரமாகும். சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
பிறகு இது உள்நாட்டு விவகாரமா அல்லது இருதரப்பு பிரச்சினையா. அப்படி என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை என்ன. காஷ்மீர் பிரச்சினையை மேலும் குழப்பவே மத்திய அரசின் முடிவு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.