புதுடெல்லி
அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளநிலையில் இதனை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண மத்தியஸ்தர் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால் இக்குழுவின் சமரச முயற்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 6-லிருந்து இவ்வழக்கிற்கான விசாரணை தினமும் நடைபெறும் அறிவித்தது.
இதனிடையே, அயோத்தி வழக்கு விசாரணையை, தொலைக்காட்சிகளில் அனைவரும் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணை தொடங்குவதாக அறிவித்தது. அப்போது கோவிந்தாச்சார்யாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போதைய சூழல் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்தனர்.