புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜனார்த்தன் திரிவேதி வரவேற்றுள்ளார்.
காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டது வரலாற்றுப்பிழை சரிசெய்யப்பட்டது என்று ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நிருபர்களிடம் கூறுகையில், " ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டது தேசிய ஒருமைப்பாட்டுக்காகச் செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பழமையான விஷயம்தான் என்றாலும், சுதந்திரத்துக்குப் பின் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காஷ்மீருக்கு 370 பிரிவு வழங்கப்பட்டதை ஏற்கவில்லை, விரும்பவும் இல்லை.
நான் என்னுடைய அரசியலை டாக்டர் ராம் மனோகர் லோகியாவிடம் இருந்து படித்தவன். அவரும் 370-வது பிரிவுக்கு எதிராகத்தான் இருந்தார். தனிப்பட்ட முறையில் இந்த விஷயம் தேசத்தின் மனநிறைவுக்காச் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின் போது செய்யப்பட்ட வரலாற்றுப் பிழையை இப்போதுள்ள அரசு திருத்தியுள்ளது. இது காலதாமதம் என்றாலும் வரவேற்கக்கூடியது. இது என்னுடைய சொந்தக் கருத்து, கட்சியின் கருத்து அல்ல" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும் ஹரியாணா முன்னாள் முதல்வருமான பூபேந்திர ஹூடா நிருபர்களிடம் கூறுகையில், "காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என எப்போதும் நான் கூறிவருகிறேன். 21-ம் நூற்றாண்டில் இந்தச் சட்டத்துக்கு எந்த இடமும் இல்லை. தேசிய நலன், ஒருமைப்பாடு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் மக்களும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாகினும், இந்தத் திருத்தம் அமைதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, நம்பகத்தன்மையான சூழலை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ