ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட் டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘மிஷன் காஷ்மீர்’ திட்டம் வகுத்து வருவதாக ‘இந்து தமிழ்’ நாளேட்டில் ஆகஸ்ட் 1-ல் செய்தி வெளியானது.
இதன் பின்னணியில் சர்வதேச அளவில் நிகழ்ந்துவரும் பல்வேறு மாற்றங்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்ற பிறகு தலிபான்கள் பாகிஸ்தா னுடன் கைகோர்த்துக் கொண்டு ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சி செய்ய வாய்ப்பு இருப்ப தாக கருதப்படுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
எனவே, ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படையை வாபஸ் பெற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இது தலிபான்களுக்கு ஒருவகை வெற்றியாகக் கருதப்படும். ஆனால் இது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து காஷ்மீர் பத்திரிகை யாளர் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “அமெரிக்கப் படை வாபஸான பிறகு, பாகிஸ்தான் அரசுடன் தலி பான்களின் நட்பு அதிகமாகும். இந்த சூழலை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டு தலிபான் களையும் காஷ்மீரின் நடவடிக்கை களில் ஈடுபடுத்த வாய்ப்புகள் உள்ளன. அப்போது, ஒரு பகுதி காஷ்மீரிகள் இடையே பாகிஸ் தானுக்கு கிடைத்து வரும் ஆதரவு அதிகரிக்கும். இந்த சூழல் இந்தியா வுக்கு பெரிய தலைவலியை உருவாக்கிவிடும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளனர். இதன்மூலம் தங்களது இந்துத்துவா நோக்கத் தையும் நிறைவேற்றி விட்டனர்” என்றனர்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் குடியேறுவது அதிகரிக்கும். மேலும் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கான குடியிருப்பு களை அங்கு அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் பலனாக, காஷ்மீரின் பூகோள அமைப்பு முற்றிலும் மாறிவிடும். இந்த மாற்றம் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரிகளை வலுவிழக்கச் செய்வதுடன், இந்தியாவை பலப்படுத்தும் என்பது அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் திட்டமாக உள்ளது. இதன்மூலம், பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் வரும் தலிபான்களையும் எளிதாக சமாளிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது..