பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட குல்தீப் சிங் சிங்கார் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் சீதாப்பூர் சிறையிலிருந்து டெல்லி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது. 
இந்தியா

உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செங்கார் எம்எல்ஏ: திஹார் சிறைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் சிங் செங்கார் எம்எல்ஏவை திஹார் சிறைக்கு மாற்றும்படி டெல்லி நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.

உ.பி.யின் உன்னாவ் என்ற இடத்தில் குல்தீப் சிங் செங்கார் எம்எல்ஏ, அவரது வீட்டில் சிறுமி ஒருவரை (அப்போது அவரது வயது 17) வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 28-ம் தேதி அதிகாலை ரேபரேலியில், பாதிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பெண் படுகாயமடைந்தார். உறவினர்கள் இருவர் பலியாகினர். வழக்கறிஞரும், உன்னாவ் இளம்பெண்ணும் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தற்செயல் அல்ல, திட்டமிட்ட சதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. செங்கார் எம்எல்ஏவை கட்சியிலிருந்து பாஜக நீக்கிய பின் உன்னாவ் பாலியல் வழக்கு தீவிரமடைந்தது. செங்கார் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தினசரி அடிப்படையில் விசாரணையை நடத்தி 45 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

உன்னோவ் பாலியல் வழக்கை டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டெல்லியில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை மாவட்ட நீதிபதி தினேஷ் சர்மா விசாரித்தார். 

பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செங்கார் எம்எல்ஏ மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சட்டப்பேரவை உறுப்பினரின் இல்லத்திற்கு நைச்சியமாகப் பேசி அழைத்து வந்த அவரது கூட்டாளி சஷி சிங் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை சீதாப்பூர் சிறையில் இருந்து புதுடெல்லியில் உள்ள திஹார் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிபதி சர்மா அறிவுறுத்தினார். விபத்து வழக்கு தவிர, பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர், காவலில் வைக்கப்பட்ட அவரது மரணம் மற்றும் பாலியல் கும்பல் பலாத்காரம் வழக்கு உள்ளிட்ட மற்ற மூன்று வழக்குகளும் தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளன.

சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது செங்காரை  10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சந்தித்த தகவலும், அதற்கான முறையான பதிவுகளை சிறை நிர்வாகம் பராமரிக்காத விவகாரம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

- பிடிஐ

SCROLL FOR NEXT