புதுடெல்லி
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார்.
இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘‘அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவையான இடங்களில் போலீஸாரைக் குவித்து பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையை வைத்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.