இந்தியா

370-வது பிரிவு ரத்து: பிஎஸ்பி, ஒய்எஸ்ஆர், பிஜேடி, அதிமுக ஆதரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து, இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பிஜூ ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். 

இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். 

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

மாநிலங்களவையில் இதுதொடர்பாகப் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதிஷ் சந்திரா ‘‘மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. 370-வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் காஷ்மீர் மாநிலம் தொடர்பான பிற மசோதாக்கள் அனைத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு’’ எனக் கூறினார்.

இதுபோலவே பிஜூ ஜனதாதள கட்சி எம்.பி. பிரசன்னா ஆச்சார்யா பேசுகையில் ‘‘ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற உண்மையான உணர்வு இன்று தான் உருவாகியுள்ளது. எனவே எங்கள் கட்சி முழுமையாக மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் மாநிலக் கட்சியாக இருக்கலாம். ஆனால் நாடு தான் எங்களுக்கு முதன்மையானது’’ எனக் கூறினார். 

இதுபோலவே சிவசேனா, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
 

SCROLL FOR NEXT