ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என அமித் ஷா அறிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவை அதிமுக வரவேற்கிறது. 370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது தான் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் இது தேவையில்லை என்ற முடிவை ஏற்கிறோம். தேசத்தின் ஒருமைப்பாடு என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது வழியில் இதனை அதிமுக ஆதரிக்கிறது'' என்றார்.