நாடாளுமன்றத்தின் முன் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்திய பிடிபி எம்.பி.க்கள் 
இந்தியா

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஜம்ம காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பக்தர்கள் அனைவரையும் மலையில் இருந்து கீழே உடனடியாக இறங்கி, சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட மாநில அரசு உத்தரவிட்டது. கடந்த வாரத்தில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டும், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் போடப்பட்டு பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 


அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூடி இன்று ஆலோசனை நடத்தின. மக்களவையிலும், மாநிலங்களிலும் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது, அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பது குறித்தும் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மேலும் ஜம்மு காஷ்மீரின் பிடிபி கட்சி எம்பிக்கள் நசீர் அகமது லாவே, மிர் முகமது பியாஸ் ஆகியோர்  நாடாளுமன்ற வளாகத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தினார்கள்.

பிடிஐ

SCROLL FOR NEXT