இந்தியா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து: கடும் அமளிக்கு இடையே மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒருவாரமாகவே ஏராளமான பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு குவித்து வருகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இருந்து வரும் சூழலில் அங்கு தீவிரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அமர்நாத் யாத்திரையில் இருந்த பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அசாதாரண சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை தாக்கல் செய்து பேச முயன்றார். குலாம் நபி ஆசாத் இடைமறித்துப் பேசுகிறார். அப்போது, காஷ்மீரில் அசாதாரணச் சூழல் நிலவுகிறது. போர் நடைபெறும் சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ எனக் கூறினார். அப்போது அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அமித் ஷா பேசுகையில், ‘‘ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’’ என அறிவித்தார். கடும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT