புதுடெல்லி,
மத்திய அரசு தனது நோக்கங்களை அடைவதற்காக ஜனநாயகத்தின் அனைத்து விதிகளையும் மீறும் என்பது சமிக்ஞை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பக்தர்கள் அனைவரையும் மலையில் இருந்து கீழே உடனடியாக இறங்கி, சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட மாநில அரசு உத்தரவிட்டது. கடந்த வாரத்தில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டும், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் போடப்பட்டு பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வி்ட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைத்துள்ளது கவலைக்குரியது. அரசு தனது இலக்குகளை அடைவதற்காக அனைத்து ஜனநாயக மரபுகள், கொள்கைகளை மீறும் என்பதன் சமிக்ஞைதான் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுக் காவலை நான் கண்டிக்கிறேன்.
ஜம்மு காஷ்மீரில் ஏதோ துரதிர்ஷ்டமான சம்பவம் நடக்கப்போகிறது என ஏற்கெனவே எச்சரித்து இருந்தேன். மத்திய அரசு அதற்கான தீர்மானத்துடன் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்