நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது விழாவில் பங்கேற்ற அசாம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பில் உள்ள) அரூப் குமார் கோஸ்வாமியிடம், நீண்டகாலம் நிலுவையில் உள்ள வழக்குகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவற்றை விசாரித்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மேலும் பேசியதாவது:
''இந்திய அளவில் கடந்த 25 ஆண்டுகளாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஜூலை 10 அன்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நான் பேசினேன். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை நீதிபதிகளிடம், 50 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் என்று கோரிக்கை வைத்தேன்.
இதில் 90 லட்சம் வழக்குகள் சிவில் தொடர்பான வழக்குகள் ஆகும். சம்மன் அனுப்பவேண்டிய வழக்குகளில் இன்னும் சம்மன் அனுப்பப்படாததால் 20 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ஒரு கட்டத்தில் அப்படியே தேங்கியுள்ளன''.
இவ்வாறு ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.