திருவனந்தபுரம்
கேரள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில் சொகுசு கார் ஓட்டிச் சென்று பைக் மீது மோதியதில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொடக்கத்தில் தான் கார் ஓட்டவில்லை என்று மறுத்த ஐஏஎஸ் அதிகாரி அதன்பின் விசாரணையில் குடிபோதையில் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
கேரள மாநில அமைச்சரவையில் சர்வே இயக்குநராக இருப்பவர் 33 வயதான ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமன். இவர் மருத்துவர், சமீபத்தில் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்து மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மதுபாரில் தனது தோழி வாபா பெரோசுடன் சேர்ந்து வெங்கிடராமன் நேற்று மது அருந்தியுள்ளார். அதன்பின் இருவரும் பெரோஸ் வைத்திருந்த விலை உயர்ந்த சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது மியூஸியம் சாலையில் வெங்கிடராமன் ஓட்டிய கார் வந்தபோது, சாலையில் சென்ற பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்கம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த அந்த இளைஞரின் யார் என போலீஸார் விசாரித்தபோது, அவர் பெயர் கே. முகமது பஷீர்(35) என்பதும், சிராஜ் எனும் மலையாள நாளேட்டின் தலைமை செய்தியாளர் என்பதும் தெரியவந்தது.
பணி முடிந்து வீட்டுக்கு திரும்புகையில் கார் மோதியதில் முகமது பஷீர் பலியாகியுள்ளார். கார் மோதிய வேககத்தில் முகமது பஷீரும், பைக்கும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கின் பல்வேறு பாகங்கள் ஆங்காங்கே சாலையில் சிதறிக்கிடந்தன, பஷீரின் செருப்பு, செல்போன், சாப்பாட்டு கூடை போன்றவை விபத்து நடந்த 4 மீட்டருக்கு அப்பால் சிதறிக்கிடந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீஸார் ஐஏஎஸ் அதிகாரி வெங்கிடராமன், அவரின் நண்பர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முதலில் தனது தோழிதான் கார் ஓட்டினார் என்று ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்தார்.
தோழியை தனியாக அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, காரை ஐஏஎஸ் அதிகாரி வெங்கிடராமன் ஓட்டினார், தான் பின்னால் அமர்ந்திருந்ததாகத் தெரிவித்தார். இருவரும் முரணான வாக்குமூலங்களை அளித்தனர். அதன்பின் வெங்கிடராமனிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் தானே கார் ஓட்டினேன் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐபிசி 279 பிரிவு, 304ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்கள் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், "கார் மிகவேகமாக வந்ததையும், சாலையில் சென்ற பைக் மீது மின்னல் வேகத்தில் மோதி நின்றதையும் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பைக்கின் மீது மோதுவதற்கு முன்பாக ஆட்டோ ஒன்றிலும் இந்த கார் மோதிவிட்டு வந்ததையும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸ் ஆணையர் தினேந்திரா காஷ்யப் கூறுகையில், " கார் ஓட்டியது குறித்து ஐஏஎஸ் அதிகாரி வெங்கிடராமனும், அவரின் தோழியும் முரண்பட்ட வாக்குமூலம் அளித்தனர். அதன்பின் ஐஏஎஸ் அதிகாரி தனது தவறை ஒப்புக்கொண்டார். அவர் குடிபோதையில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன, மருத்துவப் பரிசோதனையும் எடுக்கப்பட்டது. லேசாகக் காயமடைந்த வெங்கிடராமன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் " எனத் தெரிவித்தார்.
கேரள யூனியன் ஆப் வொர்க்கிங் ஜர்னலிஸ்ட்(கேயுடபிள்யுஜே) அமைப்பு விடுத்த அறிக்கையில், போலீஸார் முறையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே.சசீதரன் கூறுகையில், " ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். விதிகளையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய அதிகாரியின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் " எனத் தெரிவித்தார்.
முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் பத்திரிகையாளர் பஷீர் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிடிஐ