மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான யாகூப் அப்துல் ரஸாக் மேமன், தனது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு எதிரான வழக்கில் சட்ட ரீதியான பரிகாரங்கள் அனைத்தும் இன்னும் முடியவில்லை என்றும் மகாராஷ்டிர ஆளுநருக்கு கருணை மனு தாக்கல் செய்திருப்பதாகவும் யாகூப் மேமன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். 2007-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இவருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான மேமனின் இறுதி சீராய்வு மனுவை, தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வரும் 30-ம் தேதி அவர் தூக்கிலிடப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில் தனது இறுதி சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த உடன் மகாராஷ்டிர ஆளுநருக்கு யாகூப் மேமன் கருணை மனு அனுப்பினார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மேமனின் கருணை மனுவை கடந்த மே மாதம் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.