ராம்பூர்
பாஸ்போர்ட் பெற சமர்ப்பிக்கப்பட்ட பிறந்த நாள் தொடர்பான ஆவணத்தில் முரண்பாடு ஏற்பட்டதால் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஆசம்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஆசம்கானின் மகனும் சுவார் தொகுதி எம்.எல்.ஏவுமான அப்துல்லா ஆசம் கான் மீது உ.பி.யைச் சேர்ந்த பாஜக ஆர்வலர் ஆகாஷ் சக்சேனா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
''அப்துல்லா, பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கும் பின்னர் தவறாகப் பயன்படுத்துவதற்கும் தவறான தகவல்களை வழங்கியுள்ளார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகரான அப்துல்லா, உயர்நிலைப் பள்ளி, பி.டெக் மற்றும் எம்.டெக் ஆகியவற்றின் சான்றிதழ்களில் அப்துல்லா ஆசம் கானின் பிறந்த தேதி ஜனவரி, 1993. ஆனால் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பிறந்த தேதி செப்டம்பர் 30, 1990 ஆகும். கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களில் வெவ்வேறு பிறந்த தேதிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச விதான் சபா வெளியிட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையேட்டில், அப்துல்லாவின் பிறந்த தேதி செப்டம்பர் 30, 1990 என குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்களுக்காக பாஸ்போர்ட் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பல்வேறு பதவிகளில் அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது,
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 420, 467, 468 மற்றும் 471 பிரிவுகளின் கீழ் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் பிரிவு 121 (1) ஏ இன் கீழ் தண்டனைக்குரியது. எனவே, சட்ட நடவடிக்கை எடுப்பது, பாஸ்போர்ட்டை அப்துல்லா வசம் இருந்து ரத்து செய்வது முக்கியம் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் சக்சேனாவின் புகாரின் பேரில் அப்துல்லா ஆசம் கான் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்துல்லா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் உத்தரவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.