கோப்புப்படம் 
இந்தியா

உன்னாவ் வழக்கு: விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் காயமடைந்து மோசமான உடல் நிலையில் இருப்பதால், விபத்து வழக்கின் விசாரணையை ரேபரேலியில் இருந்து டெல்லிக்கு மாற்றும் தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவு எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டு எழுந்தது. இதையடுத்து, எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், உள்பட உறவினர்கள், வழக்கறிஞர் காரில் தங்களின் உறவினரைச் சந்திக்க சென்றனர். அப்போது, லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை எம்எல்ஏ செங்கார் திட்டமிட்டு நிகழ்த்தியதாக பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள். இந்த விபத்தில் காயமடைந்த பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் வழக்கு, விபத்து ஏற்படுத்திய வழக்கு உள்பட 5 வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனறும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கவும் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. மேலும விபத்து வழக்கின் விசாரணையை 7 நாட்களுக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா  ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி, விபத்து தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாகச் சென்று வருகிறது . விபத்து ஏற்படுத்திய வழக்கு விசாரணையில் இருக்கும் போது மற்ற வழக்குகளை டெல்லிக்கு மாற்ற இயலாது. அதுவரை உத்தரவை ஒத்திவைக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும், வழக்கிற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வி. கிரியை நீதிமன்றம் நியமித்து இருந்தது. அவர் கூறுகையில், " பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது சுயநினைவின்றி இருக்கிறார், செயற்கை சுவாசத்துடன் உயிர்வாழ்ந்து வருகிறார், ஆதலால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரும் நிலையில் உடல் நிலை இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் உடல்நிலையும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை " எனத் தெரிவித்தார். 

இரு தரப்பு ஆலோசனைகளையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில், " உன்னாவ் பலாத்கார வழக்கில் விபத்து ஏற்படுத்திய வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதால், ரேபரேலி நீதிமன்றத்தில் இருந்து விசாரணையை டெல்லி மாற்றும் எங்களின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் 

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர் லக்னோவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றும் முடிவை அவர்களிடமே விடுகிறோம். 

அதேசமயம், எய்ம்ஸ் மருத்துவனைக்கு மாற்ற விரும்பினால் உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் செயலாளரை அனுகலாம். 
ரேபரேலி சிறையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவை டெல்லி திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும் " என உத்தரவிட்டனர். 

வழக்கின் விசாரணை மீண்டும் திங்கள்கிழமை எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிடிஐ

SCROLL FOR NEXT