புதுடெல்லி
காஷ்மீருக்கு துணை ராணுவப் படையினர் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுப்ப ஒரு வாரத்திற்கு முன்பே உத்தரவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. ஆனால் அதுகுறித்த விவரங்களை பொதுவில் விவாதிப்பது ஒருபோதும் நடைமுறையில் இல்லை என தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்ய பாஜக அரசு உறுதியாக உள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீரில் துணை ராணுவப்படையை அனுப்பப்படுவது குறித்த செய்தி பரவிய நிலையில் ஊடகங்கள் பல்வேறுவிதமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக நேற்று, (வியாழக்கிழமை) காஷ்மீருக்கு கூடுதலாக துணை ராணுவப் படையினர் 25 ஆயிரம் பேர் அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்த விவரம்:
''காஷ்மீருக்கு பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினர் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுப்ப ஒரு வாரத்திற்கு முன்பே உத்தரவிடப்பட்டுவிட்டது. காஷ்மீருக்கு துணை ராணுவப் படையினர் 25 ஆயிரம் பேர் அனுப்பியுள்ளதாக வந்த செய்தி ஊகங்கள் அடிப்படையில் பரவியதாகும்.
மேலும் காஷ்மீருக்கு துணை ராணுவப்படை அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் விவரங்களை பொதுவில் விவாதிப்பது ஒருபோதும் நடைமுறையில் இல்லை'' என அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
- சிறப்பு செய்தியாளர்