இந்தியா

தோல்விகள் ஒன்றும் சமூக அவலமல்ல.. சித்தார்த்தா மர்ம மரணம் குறித்து நிதியமைச்சர் கருத்து

செய்திப்பிரிவு

கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தாவின் மர்ம மரணம் குறித்து பேசியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவின் மிகப் பெரிய காஃபி செயின் கடைகளின் நிறுவனரான சித்தார்த்தா, கடந்த திங்கள்கிழமை அன்று மங்களூருவில் இருக்கும் நேத்ராவதி ஆற்று பாலத்தில் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் புதன்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சித்தார்த்தா, காணாமல் போனதற்கு முன்னர் தனது கஃபே காஃபி டே போர்டு உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் எழுதியிருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில் வருமான வரித் துறை மன ரீதியாக துன்புறுத்தியது குறித்து குறுப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல், காஃபி டே நிறுவனத்தின் தனியார் தொழில் பங்குதாரர் ஒருவர் கொடுத்த அதீத அழுத்தம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்தக் கடிதம் தற்கொலைக் குறிப்பாக பாவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களவையில் இன்சால்வன்சி மற்றும் பேங்க்ரப்ட்சி கோட்பாடுகள் மீதான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், "வியாபார வர்த்தகத்தில் தோல்வி ஏற்படுவதை ஒரு சமூக அவலமாக பார்க்கக் கூடாது. அதை மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும் கூடாது. தொழிலதிபர்கள் தோல்வி ஏற்பட்டாலும் கூட, அதை  Insolvency and Bankruptcy Code (IBC) கோட்பாடுகளின்படி ஏற்று கண்ணியத்துடன் தொழிலிருந்து வெளியேற தங்கள் பிரச்சினைகளைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இதற்கிடையில் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்று பல சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT