விவசாயிகள் தற்கொலை தொடர்பான கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த மத்திய அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க ஜனதா பரிவார் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
விவசாயிகள் தற்கொலைக்கான காரணம் குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், கடன், வறட்சி, காதல் உட்பட பல் வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு பொறுப்பற்ற வகையில் பதில் அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் குற்றம்சாட்டி உள்ளன.
இந்நிலையில், இந்தப் பிரச்சினையை ஜனதா பரிவார் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த அமைச்சர் ராதா மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
மேலும், உண்மைக்குப் புறம்பாக வேண்டுமென்றே பதில் அளித்த அமைச்சர் மீது மாநிலங்களவையில் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுபோல் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான எச்.டி.தேவ கவுடா டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தர்ணாவில் ஈடுபட உள்ளார். பல்வேறு விவசாய அமைப்பினர் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ஆதரித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களைக் கண்டித்தும் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் கே.சி. தியாகி கூறும்போது, “மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட உள்ள தேவ கவுடாவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இடதுசாரி கட்சித் தலைவர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் மத்திய அரசை எதிர்த்துப் போராட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.