புதுடெல்லி
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
ஆனால், ராகுல் காந்தி தலைவராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருநது வருகிறார்.
இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி வதேராவை பலர் முன்மொழிந்து வருகின்றனர். பிரியங்கா தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், எம்.பி. சசிதரூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
2 மாதங்களாகியும் இன்னமும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட வில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு காரிய கமிட்டியை கூடும் என மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தாள் கொண்டாட்டம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் நேற்று கூடி விவாதித்தனர். அப்போது தலைவர் பதவியை பிரியங்கா ஏற்க வேண்டும் என பொதுச்செயலாளர்கள் வற்புறுத்தினர். ஆனால் தலைவர் பதவிக்கு தன்னை கணிக்கில் எடுக்க வேண்டாம் என பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிகிறது. தன் பெயரை தவிர்த்து விடுமாறு மூத்த தலைவர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்தாக கூறப்படுகிறது.