இந்தியா

வதோதராவில் பெரும்வெள்ளம்: வீடுகளைச் சூழ்ந்த தண்ணீர்; பால் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

வதோதரா

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. உணவின்றி தவிக்கும் மக்கள் பால் வாங்க வரிசையில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் காஷ்மீர், உத்தர பிரதேசம், பிஹார், அசாம் உட்பட பல மாநிலங்களிலும் கடந்த சில தினங்களுக்கு மன்பு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மும்பையில் பெய்த மழையயால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

இந்தநிலையில், சில நாட்கள் ஓய்ந்திருந்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வதோதராவில் அமைந்துள்ள விமான நிலைய ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வதோதரா நகரத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் அவதிக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். 

எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தண்ணீர், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் குடிக்க பாலும் கிடைக்கவில்லை. இன்று காலை பல இடங்களில் மக்கள் வரிசையில் நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கினர். இதனிடையே வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

SCROLL FOR NEXT