இந்தியா

அறிவுரை சொன்ன போலீஸை மடக்கி மடக்கி கேள்வி கேட்ட உ.பி. பள்ளி மாணவி: பாஜக பதிலளிக்க வலியுறுத்தும் பிரியங்கா காந்தி

செய்திப்பிரிவு

பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை சொன்ன போலீஸாரை  உத்தரப் பிரதேச பள்ளி மாணவி ஒருவர் மடக்கி மடக்கி கேள்வி கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கல்வி நிலையங்களில் போலீஸார் நேற்று (புதன்கிழமை)  சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அந்த வரிசையில் பாராபங்கி என்ற இடத்திலுள்ள பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது 11-ம் வகுப்பு மாணவி எழுப்பிய கேள்வி போலீஸாரை திக்குமுக்காடச் செய்தது.

பாஜக எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவோ இளம் பெண் கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வருகிறார்.

இதனை சுட்டிக் காட்டிய மாணவி, நீங்கள் பெண்கள் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். இங்கே பாஜக எம்.எல்.ஏ.,வால் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அவர் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறார். அது விபத்து அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். விபத்தை ஏற்படுத்திய லாரியின் நம்பர் ப்ளேட் கறுப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. சாதாரண நபர் தவறு செய்திருந்தால் எதிர்த்து குரல் எழுப்பிவிடலாம். ஆனால், பலம் வாய்ந்த நபரென்றால் நாங்கள் குரல் எழுப்பினாலும் பலனிருக்காது என்று எங்களுக்கே தெரியும். இதோ உன்னாவோ பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார். பலம் வாய்ந்தவர்களை எதிர்த்தால் எங்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம். எனக்கும் இது போன்று நேராது என்பதற்கு என்ன உறுதி?" என்று வினவினார்.

அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நின்றார் கூடுதல் எஸ்.பி.எஸ்.கவுதம். அந்த மாணவி பேசி முடித்தபோது சக மாணவிகள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

பிரியங்கா கோரிக்கை..

பாராபங்கி பள்ளி மாணவி எழுப்பிய கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் உ.பி. மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, "அதிகார பலமிக்க நபர் ஒருவர் எங்களுக்கு தீங்கு இழைத்தால் ஆப்போதும் எங்கள் குரல் எடுபடுமா?.. இது உத்தரப் பிரதேச மாநில பாராபங்கியில் ஒரு பள்ளியில் போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டபோது மாணவி ஒருவர் எழுப்பிய கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல. உ.பி.யில் உள்ள ஒவ்வொரு சிறுமியின்,இளம் பெண்ணின் கேள்வி. பாஜக இதற்கு பதிலளிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT