புதுடெல்லி,
உத்தரப் பிரதேசம் உன்னாவ் நகரில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்தது.
உத்தரப் பிரதேசம் பங்கர்மாவு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். 4-வது முறையாக பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு, தனது வீட்டில் ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குல்தீப் சிங் செங்கார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
உன்னாவ் நகரில் உள்ள மகி போலீஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், எம்எல்ஏ செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளிக்க முயன்றபோதுதான் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி செங்காரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண், அவரின் உறவினர் இன்னும் சிலர் காரில் தங்களுடைய வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது சாலையில் இவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார், உடன் சென்ற இரு பெண்கள் பலியாகினர். வழக்கறிஞர் ஒருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார். இது விபத்து என்று கூறப்பட்டாலும், இது விபத்து அல்ல, சதி இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரப் பிரதேச அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்துக்குள்ளாக்கிய வழக்கை கொலை வழக்காக மாற்றி, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ இன்று முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
மேலும், இந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ரேபரேலி வட்டத்தில் உள்ள குருபக்ஸ்காஞ்ச் போலீஸார் தங்களுடைய கோப்புகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைத்தனர். விபத்து நடந்த இடம் குறித்த தகவல்கள், அது தொடர்பாக சேகரிக்கப்பட்ட விவரங்கள், பொருட்கள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைத்தனர். விரைவில் விபத்து நடந்த இடத்துக்கும் சிபிஐ அதிகாரிகளை போலீஸார் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.
பிடிஐ