ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்துக்கு 10,000 கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய அரசு அண்மையில் அனுப்பி வைத்தது. ஏற்கனவே அங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவது எதற்கு என கேள்வி எழுந்தது.
காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி செய்திருப்பதால் கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், காஷ்மீர் அரசு அதிகாரிகளுக்கு கடந்த சில நாட்களாக அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எதிர்கால சட்டம் - ஒழுங்கை கருத்தில்கொண்டு உணவுப் பொருட்களை 4 மாதங்களுக்கு பத்திரப்படுத்தி வைக்குமாறு ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது, காஷ்மீர் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை (35ஏ) மத்திய அரசு ரத்து செய்யப் போகிறது என வதந்தியும் பரவி வருகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கூறுகையில், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
வழங்கும் சட்டப்பிரிவில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.
- பிடிஐ