இந்தியா

கிடப்பிலிருக்கும் கோப்புகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்: கேரள அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பினராயி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கிடப்பிலிருக்கும் கோப்புகளை 3 மாதங்களில் சரிபார்த்து முடிக்க வேண்டும் என கேரள அரசு ஊழியர்களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களின் சமூகக் கடமையை சுட்டிக் காட்டும் விதத்தில் அவர் இத்தகைய அறிவுறுத்தலை முன்வைத்ததாகத் தெரிகிறது.

கேரள தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை (திங்கள் மாலை) நடைபெற்ற அரசு உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன், "அரசு அதிகாரி ஒவ்வொருவரும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிட்டு துரிதமாக செயல்பட வேண்டும். கோப்புகளை சரிபார்ப்பதை தாமதப்படுத்தினால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும். அதன் நீட்சியாக மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை அறுவடை செய்வது தடைபடும். எனவே அரசு கொள்கை முடிவுகளை சமூக சிந்தனையுடன் அணுக வேண்டும்.

விவசாயம் மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்துள்ளது. கோப்புகளை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்துவது திட்டங்களை விரைந்து முடிக்கவிடாமல் செய்திருக்கிறது.

அரசு அலுவலகங்களில் ஒரு புதிய வேலை கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்பிகிறேன். குழுவாக இணைந்து செயல்படுவதும் துரிதமாக முடிவுகளை எடுக்கவும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பழக்கப்பட வேண்டும்.

இதில், குடிமைப் பணியியல் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடைய அங்கத்தினராக திறம்பட செயல்பட அரசு விரும்புகிறது. ஊழியர்களும் ஒரு திட்டம் நிறைவேறாமல் இருந்தால் அதற்கான காரணம் என்னவென்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

அதிகாரிகளைப் பார்க்க பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு இருப்பது அவசியம். அலுவல் நேரத்தில் ஊழியர்கள் செல்போனை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவதக்கூடாது என எச்சரிக்கிறேன்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கிடப்பிலிருக்கும் கோப்புகளை முடிக்கமாறு உத்தரவிடப்படுகிறது" எனப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது முதன்மை செயலர் வி.எஸ்.செந்தில், மொது நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் பிஸ்வநாத் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.

SCROLL FOR NEXT